உத்தரபிரதேச மாநிலத்தில் நோயுற்ற மற்றும் காயமடைந்த  பசுக்களை காக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ஒருவரின் உடலை கொண்டு செல்ல வாகனம் இல்லாததால், தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா நேற்று தொடங்கி வைத்தார்.

பசு சேவைக்காக இலவச தொடர்பு எண்ணும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களும் அந்த எண்ணை அழைத்து பசுக்களுக்கு உதவ முடியும் எனவும், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவரோடு, ஓர் உதவியாளரும் இருப்பார் எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

பொது மக்களுக்கே போதிய மருத்துவ உதவிகள் சரியான முறையில் கிடைக்காத நிலை , பசுவுக்கு ஆம்புலன்ஸ் தேவையா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அந்தசிறுவனின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால் சிறுவனின் தந்தை சடலத்தை தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.