தெலுங்கானா மாநிலம் பொத்தம்பள்ளி மாவட்டம் அருகே இருக்கும் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவரது 7 வயது மகள் கோமலா. இவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கோமலா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் சம்பத்தால் வாடகைக்கு வாகனம் எடுத்து கொண்டு செல்ல முடியாத நிலை இருந்திருக்கிறது. இதனால் மருத்துவமனை சார்பாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித்தர கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கூறி நிர்வாகம் சார்பாக மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த சம்பத், வெகு நேரமாக கண்ணீருடன் மருத்துவமனையில் நின்றிருக்கிறார். உதவவும் யாரும் முன் வராத நிலையில் மகளின் உடலை கையில் சுமந்து கொண்டு மருத்துவனையின் வெளியே இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவி கேட்டிருக்கிறார்.

பலரும் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டும் உதவி செய்திருக்கிறார். அவரின் ஆட்டோவில் மகளின் உடலை ஏற்றிக்கொண்டு சொந்த ஊரில் இறுதிச்சடங்குகளை முடித்திருக்கிறார் சம்பத்.

தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் மகளின் உடலை தந்தை கையில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.