Nitish Kumar trashes reports of skipping GST function

நாடாளுமன்றத்தில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு நடந்த ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காத போது, எப்படி அதில் கலந்து கொள்வது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதங்கத்துடன் புலம்பியுள்ளார்.

ஜி.எஸ்.டி. விழாவை முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்து விட்டார், என்று ஊடகங்கள் சில செய்தி வௌியிட்ட நிலையில், தனக்கு மத்திய அரசு அழைப்பே விடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் நிதிஷ்.

ஜி.எஸ்.டி அறிமுக விழாவிற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு சிறப்பு கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விழாவில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பீகார் மாநில நிதி அமைச்சர் ஒருவர் பங்கேற்றார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தார். நிதிஷ் குமார் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர், இதனால், மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு செல்வார் என்று பேச்சு எழுந்தது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. விழாவை ஏன் புறக்கணித்தீர்கள் என்று முதல்வர் நிதிஷ் குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் கூறுகையில், “ எனக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதா?, அல்லது என்னை விழாவுக்கு வரக்கூறி அழைத்தார்களா? அல்லது எந்த முதல்வராவது நிகழ்ச்சியில் பங்கேற்றார்களா?. மத்திய அரசு சார்பில் எம்.பி.களுக்கும், பீகார் நிதி அமைச்சருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது’’ என்று தெரிவித்தார்.