இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார்!
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் சர்ச்சைகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முன்மொழிந்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு முக்கிய தலித் முகமாக இருப்பதால், மம்தாவின் முன்மொழிவு பரவலான அங்கீகாரத்தையும் பெற்றது. மொத்தம் 28 கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளன. அதில், 12 கட்சிகள் மம்தாவின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் உரசல் போக்கை கடைப்பிடிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இதனை ஆதரித்துள்ளார்.
ராஜஸ்தானில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம்: பாஜகவை சாடிய அசோக் கெலாட்!
ஆனால், இந்த முன்மொழிவை கண்ணியமாக மறுத்த மல்லிகார்ஜுன கார்கே, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பது மட்டுமே தனது விருப்பம் என கூறிவிட்டார். அதேசமயம், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டதில் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் நிதிஷ் குமாருக்கு முக்கிய பங்கு உள்ளதால், அவர்தான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஒருவரும் கூட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் ஒற்றுமையாகப் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளராக கார்கேவை பரிந்துரைத்ததில் எனக்கு எந்த ஏமாற்றமோ மனவருத்தமோ இல்லை. எந்த பதவியின் மீதும் எனக்கு ஆசையும் இல்லை. இந்தியா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விரைவாக இறுதி செய்யப்படும். பாஜகவுக்கு எதிராக ஒன்றாக போராடுவோம்.” என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.