மனிதர்களின் உடல்நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரபணு மாற்ற கடுகுக்கு அரசு மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்த நிலையில், அதில் பிரதமர் மோடி தலையிட்டு, அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மரபணு மாற்ற கடுகு பயிரிடுவதற்கு மத்திய அரசின் மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு சமீபத்தில் அனுமதியளித்தது. இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கதவை திறப்பது

மரபணு மாற்ற கடுகு பயிரிட மத்திய அரசின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு சமீபத்தில் அனுமதியளித்தது. இந்த அனுமதி என்பது, பல்வேறு மரபணு மாற்ற உணவுப்பயிர்களான மரபணு அரசி, சோளம், கத்தரிக்காய், கோதுமை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை தனியாரும், அரசுத்துறையும் அதிகமாக அனுமதிக்க கதவை திறந்து விடுவது போன்றதற்கு சமமாகும். மரபணு மாற்றப்பயிர் என்பது களைகளை தாங்கும் தன்மையில்லாதது.

இப்போது நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்படாத கலப்பின கடுகு பயிர்கள் கிடைத்து வரும் நிலையில், ஏன் மரபணுமாற்ற கலப்பின கடுகு பயிர்களை அரசு பரிசோதிக்க நினைக்கிறது என்பது தெளிவாக இல்லை.

நம்பிக்கையில்லை

கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பாக எனது கருத்தை மத்திய வனத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். அதில் இந்த மரபணுமாற்ற கடுகை தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளின் நம்பிக்கையை பெற தவறிவிட்டன. அதனால், அரசுத்துறை நிறுவனங்கள் மூலம் அதை திணிக்க முயல்கின்றன.

கடந்த 2002-ம் ஆண்டு இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தால் மரபணுமாற்ற கடுகு நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த அண்டு மீண்டும் பொதுத்துறை மூலம் வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

தோல்வி

ஏற்கனவே மரபணு மாற்ற பருத்தியை கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் பயிர் செய்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறார்கள். மரபணு மாற்றம் என்பது தோல்வியடைந்த தொழில்நுட்பம்.

தேன் உற்பத்திபாதிப்பு

பீகார் போன்ற கடுகு விவசாயம் முக்கியத்துவம் உள்ள மாநிலங்களில் அனுமதியளிக்கப்பட்டால், இந்த பயிரின் பின்விளைவுகளில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் எங்கள் மாநிலம் கடுகு பயிரில் இருந்து தேன் உற்பத்தி சிறப்பாக செய்து நாட்டில் முன்னனி தேன் உற்பத்தியாளராக இருந்து வருகிறது. அது பாதிக்கப்படும்.

மாநிலத்தில் அனுமதி

அவசர கதியில் மரபணு மாற்ற பயிர்களுக்கு பிரதமர் அனுமதி அளிக்கக்கூடாது. அது நாட்டில் உள்ள விவசாயிகள், மக்களின் நலனை பாதிக்கும். இந்த மரபணுமாற்ற கடுகை சோதனைக்காக பயிர் செய்யும் முன், மாநில அரசுகளிடம் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும்

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.