ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்களது வீட்டில் 4 பக்க கொண்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (38). ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மால்வி கேசவன் (35). திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலனின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள குளியல் அறையில் ஜெயபாலன் பிணமாக கிடந்தார். படுக்கை அறையில் அவரது மனைவி மால்வி கேசவன் இறந்து கிடந்தார். 

இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது 4 பக்கம் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி உள்ளார். மேலும், குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.