மாணவியரை தவறாக நடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி உடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக ஜாமீன் வழங்கியுள்ளது. 

கல்லூரி மாணவிகளை தவறாக நடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வழக்கில் பேராசிரியை நிர்மலா தேதி கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 

இதனிடையே முருகன் மற்றும் கருப்புசாமி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்றமும் அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து முருகன் மற்றும் கருப்புசாமி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.