டெல்லியில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

டெல்லியில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

இதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு நாளை முதல் இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.