இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு, தாக்குதல் விமானமான மிராஜ் என்ற பெயரை சூட்டியுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று முன்தினம் அதிகாலை இந்திய விமானப்படையில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

 

இந்த தாக்குதலில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் நவ்கவுர் மாவட்டம், தாப்தா கிராமத்தைச் சேர்ந்த மகாவிர் சிங், சோனம் சிங் தம்பதி, பாலகோட்டில் மிராஜ் விமானம் தாக்குதல் நடத்திய அதிகாலை, 3:50 மணிக்கு பிறந்த தங்கள் குழந்தைக்கு, விமானத்தின் பெயரான மிராஜ் சிங் ரத்தோர் என பெயர் சூட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைக்கு நாட்டின் பெருமை மிக்க மிராஜ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.