சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கி வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றதையடுத்து, நேற்று முதல் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் மத்திய துணை ராணுவ படையின் கமாண்டோக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு காலத்தை, அச்சுறுத்தலின் அளவை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யலாம் என திருத்தம் கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும், எஸ்.பி.ஜி.யின் சீரான நடைமுறைக்கு சோனியா காந்தி குடும்பத்தினர் தடையாக உள்ளதாக புகார் வந்ததையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. 

இந்நிலையில், நேற்று முதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது வாரிசுகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு இந்தியா முழுவதும் பாதுகாப்பு வழங்கும் பணியை சி.ஆர்.பி.எப். ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய துணைராணுவ படையின் கமாண்டோக்கள் இஸ்ரேலின் எக்ஸ்-95, ஏ.கே. சீரிஸ் மற்றும் எம்.பி.-5 துப்பாக்கிகளுடன் சோனியா காந்தியின் (ஜன்பத், கதவு எண் 10) வீட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வீடுகளிலும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.