திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்களா நீங்கள் ? இந்தா பிடிங்க மாதம் 1000 ரூபாய் பென்ஷன்…

இந்தியாவில் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றோருக்கு மத்திய, மாநில அரசுகளால் மாதந்தோறும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டடு வருகின்றன.

ஆனால் திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாமலும், வரதட்சனை கொடுக்க வழி இல்லாமலும் லட்சக்கணக்கான முதிர்கன்னிகள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் குறித்து எந்த அரசும் இதுவரை கவலைப்பட்டதாக தெரியவில்லை.

திருமணம் ஆகவில்லை என்ற கவலை ஒருபுறமும், ஏழ்மையான நிலை ஒருபுறமும், ஆதரவில்லாமல் தனித்து நிற்கும் பிரச்சனை ஒருபுறமும் என இந்தப் பெண்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.

இவர்களது வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ்…

தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா சட்டசபையில் பென்சன் திட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது உதயமானது தான் இந்த திட்டம்.

ஆதரவற்ற, தனித்து வாழும் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் பென்ஷன் வழங்க அப்போது முடிவு செய்யப்பட்டது.

வறுமையால் ஆண்களை விட பெண்கள் அதிக துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதனால் அவர்களை பொருளாதார ரீதியில் பாதுகாக்கும் வகையில் பென்ஷன் வழங்க முடிவு செய்யப்பட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்தார். 


இத்திட்டத்தை சேயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் தனித்து வாழும் பெண்களின் விவரங்களை சேகரிக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டு முதல் இந்த பென்ஷன் திட்டம் அமலுக்கு வருகிறது. தகுதியுள்ள பெண்கள் தங்களது பெயரை இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு  தகுதியுள்ள பெண்களை பதிவு செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சந்திர சேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உன்னதமான திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற முயற்சி மேற்கொள்ளுமா ?