பணம் கொடுத்து மக்கள் ஆதரவை சாதகமாக திரட்டுவதாக வரும் புகார்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களைக் கண்காணிக்க புதிய கொள்கை உருவாக்கப்படுவதாக, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது-

‘‘சில மக்கள் தொடர்பு நிறுவனங்கள், ஏராளமான பணம் செலவிட்டு, பொது மக்களின் ஆதரவை குறிப்பிட்ட ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக திரட்டுவதற்காக இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

செல்போன் இன்டர்நெட் தொழில் நுட்பம் விரிவடைந்து வரும் சூழலில், சமூக ஊடகங்களின் தாக்கம் அதிரித்து வருகிறது. எனவே சமூக ஊடகங்களையும் அவற்றில் வெளியாகும் தகவல்களையும் கண்காணிக்க வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது.

இதற்காக சமூக ஊடக கொள்கை ஒன்றை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிப்பதற்காக பா.ஜனதா சார்பில், குதிரை பேரம் உள்ளிட்ட பகீரத பிரயத்தன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், வாக்குச்சீட்டுகளை இரு தரப்பிலும் காட்டிய இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் மூலம், பா.ஜனதாவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டு, அகமது படேல் வெற்றி பெற்றார்.

இதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், கருத்தரங்கில் பேசிய தேர்தல் ஆணையர் ராவத், நன்னெறி கோட்பாடுகளை மறந்து வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகளின் மீது தாக்குதல் தொடுத்தார்.

தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடந்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.