இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்வை ஆய்வறிக்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும். இந்த ஆண்டில் இதுவரை முக்கிய கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) 1.35 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. 

மந்தகதியில் இருக்கும் பொருளாதாரத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.
இந்நிலையில் கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி கண்டு இருந்தது. 

மேலும், கடந்த செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.


ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் டிசம்பர் 3-4 தேதிகளில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைத்தால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.