பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, அந்நாட்டுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தப்பட்டது. பின்னர், பிரிட்டனில் இருந்து வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களில் 6 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து,  அவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 6 பேருடன் விமானத்தில் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இதில், பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஐதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.