கேரளாவில் சமீபத்தில் பெய்த பெரு மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் மண் சரிவு காரணமாக பல வீடுகள் மற்றும் வாகனங்கள் மண்ணுக்குள் புதைத்து. இதன் மூலம் பல ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். 

மேலும் மழையால் பாதிக்க பட்ட கேரள மக்களும் உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் நிதி உதவியை அறிவித்தனர். அதே போல் கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவி, உடை, உணவு, மருந்து என கேரள மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். சிலர் நேரடியாக சென்றும் உதவிகள் செய்தனர்.

தற்போது மழை குறைந்தும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.21 கோடி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்களையும் வழங்கியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீத்தா அம்பானி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, 21 கோடிக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். இதைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்... “கேரளாவில் நம்முடைய சகோதரர்கள்  மிகப் பெரிய துன்பத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவுவது நம் கடமை. அதுமட்டுமல்லாமல் ஒரு கார்ப்பரேட் அறக்கட்டளைக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.