ஆயுதங்களுடன் சரணடைந்த நக்சலைட்டுகளுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உலக கோப்பை ஹாக்கி போட்டியை கண்டு களித்தார். மன்னிப்பு வழங்கியதால், அந்த மாநிலத்தில் மனிதாபிமானம் மலர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் ஆயுதங்களுடன் சரணடையும் நக்சலைட்களுக்கு, பொது மன்னிப்பு வழங்கப்படுவதுடன், மறுவாழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதன்படி பல நக்சலைட்டுகள், தங்களது ஆயுதங்களுடன், போலீசில் சரணடைந்தனர்.\

இதையெடுத்து, நக்சலைட்டுகளாக வாழ்ந்த அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு, அரசு சார்பில், மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

இதையொட்டி, சமீபத்தில் ஒடிசாவின் மல்காங்கிரி மற்றும் கோராபுட் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30 நக்சலைட்டுகள், போலீசில் சரணடைந்தனர். அவர்கள், உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை, நேரில் காண வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி  மல்காங்கிரி மாவட்ட எஸ்பி, அவர்கள் உலக கோப்பை விளையாட்டு போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இந்நிலையில், அரசு அனுமதியுடன் 16 பெண்கள் உள்பட சரணடைந்த 30 நக்சலைட்களை, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒடிசா  மாநில முதல்வர் நவீன் பட்நாயக், சரணடைந்த நக்சலைட்டுகளுடன் சரிசமமாக அமர்ந்து, உலக கோப்பை ஹாக்கி போட்டியை கண்டு  களித்தார்.

முதல்வருடன் ஹாக்கி போட்டி பார்த்தது, வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம், இதன் மூலம், நாங்களும், மற்றவர்களை போல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதை உணர்ந்தோம் என சரணடைந்த நக்சலைட்கள் தெரிவித்துள்ளனர்.