உத்தரப் பிரதேசத்தில் பசுவை கொன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததற்கு பின்னர் பசுக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பசுக்கள் காயம் அடைந்தால் அவைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக குளிர்சான வசதியுடன் கூட ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி பசுக்களை கொன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்த கலீல், புரா மற்றும் இனாம் குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி இருந்தார். 

அதில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வது, சட்டவிரோதமாக கடத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முசாபர் நகரில் கைதான மூவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரிய தர்ஷி நேற்று தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.