குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்த நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் கலவரமானது. தொடர்ந்து, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதை கண்டித்து லக்னோ உள்ளிட்ட இடங்களிலும் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.