நடுவானில் சென்று கொண்டிருந்தபோது தனியார் விமானம் ஒன்றில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு எவரும் எழுந்து நிற்காததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து..

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஆந்திராவின் திருப்பதியில் இருந்து தெலங்கானாவின் ஐதராபாத் நகருக்கு கடந்த 18-ந்தேதி சென்றது. அப்போது, விமான பணியாளர்கள் அறையில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. விமானம் ஐதராபாத்தில் தரை இறங்குவதற்கு 18 நிமிடம் முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றது. விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்ததால் எவரும் எழுந்திருக்கவில்லை.

திடீர் தேசிய கீதம்

சிலர் எழுந்து நிற்க முயற்சி செய்தபோது, வேண்டாம் என்று விமான பைலட் தடுத்து நிறுத்தினார். மேலும், சீட் பெல்ட்டை யாரும் கழற்ற வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் புனீத் திவாரி என்ற பயணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. வங்கி மேலாளரான அவர், இந்த விவகாரம் தொடர்பாக விமானப் பணியாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

மன்னிப்பு கோரியது

இதுகுறித்து அவர் கூறுகையில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தேசிய கீதம் திடீரென ஒலிபரப்பப்பட்டது. ஆனால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டாம் என்று பைலட் வற்புறுத்தினார். அவரது செயல் என் மனதை புண்படுத்தியது என்றார்.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், விமானத்தில் தவறுதலாக தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு விட்டது. இதை அறிந்ததும் உடனடியாக அதனை நிறுத்தி விட்டோம். இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்றார்.