கடந்த ஆண்டுகளான 70களில் எந்த தியேட்டரில் படம் பார்க்க சென்றாலும், படம் ஆரம்பிக்கும் முன் தேசியகீதம் ஒளிபரப்பப்படும். அப்போது, படம் பார்க்க சென்ற அனைவரும் எழுந்து நிற்பார்கள். அப்போது, தேசிய கீதாத்தை பாட வேண்டும். இதுபோன்ற கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.

பின்னர் காலப்போக்கில் அந்த முறை அப்படியே தலைக்கீழாக மாறிவிட்டது. தற்போது, திரையரங்குகளில் டீசர் காட்சிகள் போடப்படுகின்றன. அதன்பின் ஆடைகள், சிகரெட் உள்பட பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன.

அதேபோல், காதல் ஜோடி நெருக்கமாக பேசுவது போன்ற காட்சிகள் வரும்போது, ஒரு பூவை கொண்டு மறைத்துவிடுவார்கள் அன்றைய இயக்குனர்கள். சண்டை காட்சியில் விலங்குகளின் படத்தை ஆக்ரோஷமாக காண்பித்து, வன்முறை என கூறுவார்கள்.

ஆனால், இன்றைய படங்களில் உரையாடல் காட்சிகளில் இருந்து உடை வரை எந்தவித கட்டுப்பாடும் இல்லை. வன்முறையில் ஒருவரது கையை துண்டாக வெட்டுவதும், கழுத்தை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடவிடுவதுபோன்ற காட்சிகளே வருகின்றன.

உதாரணத்துக்கு “அச்சமில்லை அச்சமில்லை” படத்தில் நாயகன் ராஜேஷ், நாயகி சரிதாவுக்கு ஆவேசமான சண்டை வரும். இந்த காட்சியை பார்ப்பவர்களின் மனதில் பதிந்துவிடும் என்பதற்காக, அருவில் வேகமாக தண்ணீர் கொட்டுவது போலவும், பின்னர் ஓடையில் மெதுவாக ஓடுவது போலவும் அப்போதைய இயக்குனர்கள் காண்பித்தனர். ஆனால், இன்று அப்படி இல்லை.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பாக படம் திரையிடுவதற்கு முன் தேசியகீதம் ஒளிபரப்பவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசியகீதம் ஒளிபரப்பும்போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அவர்களை, தியேட்டர் நிர்வாக குழுவினர் கண்காணித்து, தேசியகீதத்துக்கு மரியாதை கொடுக்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு இதுசாத்தியபடுமா என்பது காலப்போக்கில் தெரியவரும்.