கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் போது ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு வழங்க போதிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாததால் பிற மாநிலங்களில் இருந்து திரவ நிலை டேங்கர் லாரிகளை கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 11 கொரோனா நோயாளிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் நாசிக் நகரில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கர்களில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்ஸிஜன் நிரம்பிய போது வாயுக்கசிவு ஏற்பட்டது.  இதனால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்காக தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் துரதிஷ்டவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் கசிவால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 170 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் நல்லபடியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிற நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.