நர்மதா - வைகை நதிகள் இணைந்துவிட்டன! சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
நிறைவு விழாவில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம் வைகையும் நர்மதையும் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
பத்து நாட்கள் நடைபெற்ற சௌராஷ்டிர தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சௌராஷ்டிர தமிழ் சமூகத்தால் குஜராத் மற்றும் தமிழ்நாடு கலாச்சாரத் தொடர்பைக் கொண்டாடும் வகையில் இந்த சங்கம நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர், இந்த நிகழ்வு சில ஆயிரம் பேர் அவர்களின் பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிய தங்கள் வேர் நிலத்திற்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கியதாகக் கூறினார்.
சர்தார் படேலைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அமிர்த காலத்தின்போது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர் ஆசீர்வாதங்களைப் பொழிவார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்நிகழ்ச்சியில் சோமநாத்தும் ராமேஸ்வரமும், துவாரகையும் மதுரையும், நர்மதையும் வைகையும், தண்டியாவும் கோலாட்டமும் ஒன்றாகக் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் 'சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம்பிரஷாஸ்தி' என்ற புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார். "11ஆம் நூற்றாண்டில் குஜராத்தின் மீது கஜினி முகமது தொடுத்த தொடர்ச்சியான தாக்குதல்களால் இந்தச் சமூகம் இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் பட்டு வியாபாரிகள் மற்றும் நெசவாளர்களாக இருந்தனர். திருமலை நாயக்கர் போன்ற உள்ளூர் ஆட்சியாளர்களின் அனுசரணையின் காரணமாக தமிழகத்தில் தங்கினர். இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மதுரையில் குடியேறியுள்ளனர்." என்று பிரதமர் சொன்னார்.
குஜராத்தி போன்ற சொற்களைக் கொண்ட சௌராஷ்டிரா மொழிக்கு எழுத்துமுறை உள்ளது. ஆனால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது என்ற பிரதமர், தமிழ் பின்னணிப் பாடகரான டி.எம்.சௌந்தரராஜன், ‘மதுரை காந்தி’ என்று அறியப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் போன்ற புகழ்பெற்ற சௌராஷ்டிரத் தமிழர்களில் சிலரை நினைவுகூர்ந்தார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்கள், கைத்தறிகள், உணவு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டன. தமிழ், சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தி இலக்கியங்களில் கிடைக்கக்கூடிய ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகள், அத்துடன் பாரம்பரிய நடனம் மற்றும் இசை, நாட்டுப்புற இசை, கச்சேரிகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன.