ஜோஷிமத் நிலை என்ன? முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
உத்தராகண்டின் ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பகவதி கோயில் சேதம் அடைந்தது. இப்போது சங்கராச்சாரிய மாத்வ ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல லட்சுமி நாராயணர் கோயிலிலும் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி நிலைமைப் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைவாகச் செய்துகொடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் அலுலவகத்திலும் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. கே. மிஸ்ரா தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
ஜோஷிபத் மாவட்ட நிர்வாகத்தினரும், உத்தராகண்ட் மாநில உயர் அதிகாரிகளும் காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோஷிமத் கட்டப்பட்ட இடத்தின் குறைவான நிலைத்தன்மை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுருக்கிறது.
1976ஆம் ஆண்டு வெளியான அறிக்கையிலேயே ஜோஷிமத் பகுதி மக்கள் வசிக்க ஆபத்தான பகுதி என்று கூறப்பட்டுள்ளது என புவியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெற்றுவந்த அரசின் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.