இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. சுமார் 11 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 1323 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததையடுத்து, ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக நாடு பெரும் சிக்கலையும் சரிவையும் சந்தித்துள்ளது. ஆனாலும் இந்த ஊரடங்கால் காற்று மாசு, ஒலி மாசு என எந்தவித மாசும் இல்லாததால் இயற்கை தன்னை தகவமைத்துகொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள பெரிய நகரங்கள் அனைத்தும் வாகன சத்தமும் புகையும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகள் என எதுவுமே இல்லாமல் சுத்தமாக இருக்கின்றன.

அதிலும் இந்தியாவின் பசுமை மாநகரம்(க்ரீன் சிட்டி) என பெயர் பெற்ற பெங்களூரு, இந்த ஊரடங்கால் மேலும் அழகாகியிருக்கிறது. 40 நாட்கள் ஊரடங்கில் மரங்கள் நிறைந்த பசுமை நகரமான பெங்களூரு மாசில்லாமல் இயற்கையழகுடன் திகழ்கிறது. 

ஊரடங்கால் வாகன நெரிசலும் சத்தமும் மாசும் இல்லாத அழகான பெங்களூரு நகரின் கழுகு பார்வை வீடியோவை நம்ம பெங்களூரு ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. பெங்களூரு மாநகர நிர்வாகத்தின் அனுமதியுடன் எடுக்கப்பட்ட பெங்களூரு மாநகரின் கழுகு பார்வை வீடியோவை ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஊரடங்கு காலத்தில் தனக்கே உரித்தான இயற்கை எழிலுடன் கூடுதல் அழகுடன் காட்சியளிக்கும் பெங்களூருவை ஊரடங்கு முடிந்த பிறகும் அதேபோல காப்பதும், ஊரடங்கு முடிந்தாலும் சமூக இடவெளியை கடைபிடித்து முகக்கவசங்களை அணிந்துகொண்டு கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்வதுடன் சமூகத்தையும், அழகான பெங்களூரு நகரையும் காக்க வேண்டுமென ராஜீவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.