முஸ்லிம் மதபோதகர்

புதுடெல்லி, நவ. 16-

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகள் சட்டத்தின்(யு.ஏ.பி.ஏ.) கீழ் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை 1-ம் தேதி விடுதியொன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட தீவிரவாதிகள், மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளில் ஈர்க்கப்பட்டு தீவிரவாத பாதையைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்தது. தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டன. இந்தியாவிலும் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய டிவிடிக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக உள் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், அவரின் இஸ்லாமிய ஆய்வக அமைப்பும், சட்டத்துக்கு புறம்பான நிறுவனம் என்ற சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், ஜாகீர் நாயக் இந்தியாவுக்கு வராமல் தொடர்ந்து மலேசியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜாகீர்நாயக்கின் அமைப்பு செயல்பட்டதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளதாக உளவுத்துறை அமைப்பும், மஹாராஷ்டிரா போலீசாரும் உறுதி செய்தனர். இதையடுத்து, ஜாகீர் நாயக் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், மும்பையில் உள்ள 2 போலீஸ் நிலையங்கள், கேரளாவில் ஒரு போலீஸ் நிலையம், மற்றும் சிந்துதுர்கா போலீஸ் நிலையம் ஆகியவற்றில் ஜாகீர் நாயக் மீதும், அவரின் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் மீதும் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.