கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக

புதுடெல்லி, நவ. 16-

தேர்தலின் போது வாக்காளர் கையில் வைக்கப்படும் அழியாத மையை கடந்த 54 ஆண்டுகளாக தயாரித்து வரும் மைசூரு பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனத்திடம் ‘ போதுமான அளவு மையை இருப்பு வைத்து இருக்குமாறு’ மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபின், மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில்,சந்தேகத்துக்கு இடமான டெபாசிட்டுகளை தடுக்கும் வகையில், வங்கிக்கணக்கு இல்லாமல் பணம் செலுத்த வருவோரின் கை விரலில் மை வைக்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று கொண்டு வந்துள்ளது.

அதனால், இனி வரும் நாட்களில் அதிகமாக மை பாட்டில்கள் தேவைப்படும் என்பதால், மைசூரு மை தயாரிக்கும் நிறுவனம் போதுமான அளவு இருப்பு வைத்து தயார் நிலையில் இருக்க அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மைசூரு மை நிறுவனத்தின் மேலாளர் சி. ஹராகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “ அழியாத மையை போதுமான அளவு இருப்பு வைத்து இருக்குமாறு மத்திய அரசு சார்பில் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பாட்டில்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

54 ஆண்டு ஒப்பந்தம்....

மத்திய சட்ட அமைச்சகம், தேசிய பிசிகல் ஆய்வகம், தேசிய ஆய்வு மேம்பாட்டு கழகம், ஆகியவை, மைசூரு பெயின்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, இந்த நிறுவனம் அனைத்து சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அழியாத மை யை சப்ளை செய்ய வேண்டும் என கடந்த 1962-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தை கர்நாடக அரசு நடத்தி வருகிறது. மேலும், இந்தநிறுவனம் வெளிநாடுகளுக்கும் மையை ஏற்றுமதி செய்து வருகிறது.