மைசூரு பிரியாபட்டணாவில் பாஜ இளைஞரணி பிரமுகர் மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்டணாவை சேர்ந்தவர் மாகலி ரவி (35). பாஜ இளைஞரணி பிரமுகர். நேற்று முன்தினம் மாகலி ரவி, வேலை விஷயமாக தனது பைக்கில் வெளியே சென்றார். இரவு வீட்டுக்கு புறப்பட்டார். வீராஜ்பேட்டை - பிரியாபட்டணா சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது சாலை விபத்தில் மாகலி ரவி சிக்கியதாக கூறப்படுகிறது. இவரது உடலைக் கைப்பற்றிய பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் மாகலி ரவி சென்ற பைக் கிடந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவி விபத்தில்தான் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மர்ம நபர்கள் திட்டமிட்டு மாகலி ரவியை கொலை செய்து இருக்கலாம் என்று பாஜக தொண்டர்கள் மற்றும் மாகலி ரவியின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

ரவியின் பின்பக்கத் தலையில் பலத்த காயம் உள்ளது. அவர் உயிரிழந்தபோது அவரது வாயில் தலை நரம்புகள் ரத்தம் சொட்ட சொட்டக் கிடந்தது. எனவே இது கொலைதான் என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரவியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு பாஜக தொண்டர்களும், ரவியின் உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.