வாரத்திறக்கு 90 மணிநேர வேலை செய்ய வேண்டும் என்று L&T தலைவர் SN சுப்ரமணியன் கூறிய கருத்து பற்றி விவாதம் எழுந்துள்ள நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது கருத்தைக் கூறியுள்ளார்.

வாரத்திறக்கு 90 மணிநேர வேலை செய்ய வேண்டும் என்று L&T தலைவர் SN சுப்ரமணியன் கூறிய கருத்து பற்றி விவாதம் எழுந்துள்ள நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது கருத்தைக் கூறியுள்ளார். தாம் செய்யும் பணியின் தரத்தையே நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025 நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆனந்த் மஹிந்திரா, ​​"நடந்துகொண்டிருக்கும் விவாதம் தவறானது. ஏனென்றால், அது வேலை நேரத்தின் அளவை மட்டும்தான் வலியுறுத்துகிறது" என்றார்.

"நாராயண மூர்த்தி (இன்ஃபோசிஸ் நிறுவனர்) மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே இதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று ஆனந்த் மஹிந்திரா கூறினார்.

"எனது கருத்து என்னவென்றால், நாம் வேலையின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலையின் அளவு அல்ல. எனவே வேலை செய்வது 48 மணிநேரமா, 40 மணிநேரமா, 70 மணிநேரமா, அல்லது சுமார் 90 மணிநேரமா என்பது என்பது முக்கியம் அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனந்த் மஹிந்திரா தனது பணிகளுக்காக எத்தனை மணிநேரம் செலவிடுகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியான பதிலைத் தவிர்த்துவிட்டு, செய்யும் வேலையின் தரம்தான் முக்கியம் என்றார். "இதைத்தான் நான் தவிர்க்க விரும்புகிறேன். பேச்சு வேலை நேரத்தைப் பற்றியதாக இருக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

Scroll to load tweet…

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, எக்ஸ் தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் சமூக ஊடகங்களில் நண்பர்களுக்காக பயன்படுத்தவில்லை என்றும், அது ஒரு அற்புதமான வணிகக் கருவி என்றும் கூறினார்.

"நான் சமூக ஊடகங்களில் இருப்பது, நான் தனிமையில் இருக்கிறேன் என்பதால் அல்ல. என் மனைவி அற்புதமானவர், நான் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அதற்காக அதிக நேரம் செலவிடுகிறேன். எனவே, நான் புதிய நண்பர்களைப் பெறுவதற்காக சோஷியல் மீடியாவுக்கு வருவதில்லை. இது ஒரு அற்புதமான வணிகக் கருவி" என்று அவர் கூறினார். இந்த பதிலைக் கேட்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.