பரபரப்பு.. பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது..
நாட்டின் 3வது புதிய வந்தே பாரத் விரைவு ரயில் கால்நடை மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செ.30 ஆம் தேதி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் குஜராத் தலைநகர் காந்திநகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த வழித்தடத்தில் நாட்டின் 3 வது வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார்.
இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களிடையே வந்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே வந்த கால்நடைகள் மீது மோதி ரயில் என்ஜின் முன்பகுதி சேதமடைந்தது.
மேலும் இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அகமதாபாத் மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஜிதேந்திர ஜெயந்த் தெரிவிக்கையில், ”விபத்தை தொடர்ந்து ரயில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், என்ஜின் சீரமைப்பு பணிகள் முடிந்து வழக்கம் போல் ரயில் சேவை தொடங்கியது என்று கூறினார்.
வந்தே பாரத் ரயில், நவீன வசதிகளுடன் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டில் ஏற்கனவே புது டெல்லி - வாரணாசி, புது டெல்லி - ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.