அகிலேஷ் யாதவ் முதலமைச்சம் மட்டும்தான். நான்தான் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் என முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஆளுங்கட்சியான சமாஜ்வாடியில் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு தரப்பும் தேர்தல் கமி‌ஷனுக்கு வலியுறுத்தியுள்ளன.

இதற்கு, இரு தரப்பினரின் ஆதரவை அளிக்கும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. அதன்படி தனக்கு ஆதரவளிப்போர் குறித்த பட்டியல் மற்றும் அவர்களது கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்களை அகிலேஷ் தரப்பினர் தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளனர்.

அதேபோல் முலாயம் சிங் தரப்பினர், ஆவணங்கள் அனைத்தும் இன்று சமர்ப்பிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக முலாயம் மற்றும் உத்தரபிரதேச கட்சித்தலைவர் சிவபால் சிங் யாதவ் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.

இந் நிலையில் முலாயம் சிங் யாதவ் நேற்று, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் நானே. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராம்கோபால் யாதவ் கடந்த மாதம் 30ம் தேதிகட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். அப்படியிருக்க 1ம்தேதி அவர் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது.

மேலும், சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக நானும், மாநில தலைவராக சிவபால் சிங்கும் தற்போதும் நீடித்து வருகிறோம். அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமே என்றார்.