கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா குறித்து விழிப்புணர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திவருகின்றன. பிரதமர் மோடியின் வலியுறுத்தலை ஏற்று இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 

இப்படியாக நாடே விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையில், பாஜக எம்பி துஷ்யந்த்தின் அலட்சியத்தால் சில எம்பிக்கள் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூரின் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் துஷ்யந்த், அவரது தயாரும் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாங்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக வசுந்தரா ராஜே, கடந்த 20ம் தேதி( நேற்று முன் தினம்) தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கிடையே, கனிகா கபூரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின்னர், துஷ்யந்த், குடியரசுத்தலைவர் சில எம்பிக்களுக்கு கொடுத்த விருந்திலும், கனிமொழி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டுள்ளார். அதனால் அந்த விருந்தில் அவருடன் கலந்துகொண்ட மற்ற எம்பிக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்ட துஷ்யந்த், குடியரசுத்தலைவர் கொடுத்த சிற்றுண்டி விருந்தில் கலந்துகொண்டுள்ளார். அதேபோல இட்லி, தோசை ஆகியவற்றில் ஆர்வம் காட்டும் சக எம்பிக்களுக்கு, அவ்வப்போது திமுக எம்பி கனிமொழி விருந்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில், கனிமொழி கடந்த புதன்கிழமை கொடுத்த விருந்தில் துஷ்யந்த் கலந்துகொண்டுள்ளார். இந்த விருந்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

இந்த விருந்துகளில் துஷ்யந்த் கலந்துகொண்டபோது, கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது நிகழ்ச்சியில் துஷ்யந்த் கலந்துகொண்டதும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த தகவல் தெரியவந்திருப்பதால், அவருடன் விருந்தில் கலந்துகொண்ட சக எம்பிக்கள் அவர்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.