நாடாளுமன்றத்தில், மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை தமிழில் பேசியதற்கு மற்ற எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா இருந்தபொழுது, அவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் 1942 ஆம ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் மிகவும்  முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழா
இன்று நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை உரையாற்றத் துவங்கினார்.

தம்பிதுரை, தனது பேச்சைத் தமிழில் தொடங்கி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி பேச ஆரம்பித்தார். இதற்கு மற்ற எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மேலும், தம்பிதுரை முன் அனுமதி பெறாமல் பேசுவதாகவும், அவரது பேச்சின் ஆங்கில மொழிபெயர்ப்பை தங்களுக்கு தராமல் பேசுவதாகவும் எனவே அவர் பேசுவது புரியவில்லை என்றும், அவர் தமிழில் பேசக் கூடாது என்றும் கூச்சலிட்டனர்.

இதனால், கோபமடைந்த தம்பிதுரை, நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், நான் எனது தாய்மொழியில் பேச முடியாத நிலை உள்ளது. உறுப்பினர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டிய நிலை உள்ளது.

தாய்மொழியில் பேசுவதென்றால் முன் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலைதான் மற்ற மாநில எம்.பி.க்களுக்கும் உள்ளது. நான் எனது மொழிபெயர்ப்பை வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள், இதேபோல் நீங்கள் பேசும்போது ஏன் மொழிபெயர்ப்பை
வழங்குவதில்லை என்று தம்பிதுரை ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களையும், துணை சபாநாயகரையும் சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தம்பிதுரை எம்.பி. தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.