விபத்து நடந்த பகுதியில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரலாமா? உச்சநீதிமன்றம் உத்தரவு!
விபத்து நடந்த பகுதியின் அதிகார எல்லைக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் அதிகார எல்லைக்குள் இருக்கும் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. மொழியை காரணமாக வைத்து ஒரு வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோருவது சரியில்லை என்றும் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் 166வது பிரிவின் கீழ் இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய உரிமை கோருபவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு உட்பட்ட மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. உரிமைகோருபவர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது வியாபாரம் செய்யும் அல்லது பிரதிவாதி வசிக்கும் உள்ளூர் எல்லைக்குள் அணுகலாம் என்று நீதிபதி தீபாங்கர் தத்தா இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் (எம்ஏசிடி) நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கை மேற்கு டார்ஜிலிங்கில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கோரிய மனுவை நீதிபதி தீபாங்கர் தத்தா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும், இந்தி தேசிய மொழி என்றும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சிகள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, உத்தரபிரதேச மாநிலம் ஃபருக்காபாத் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் (எம்ஏசிடி) நிலுவையில் உள்ள மோட்டார் விபத்து வழக்கை மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிற்கு மாற்றக் கோரிய மனுவை தனி நீதிபதி தீபாங்கர் தத்தா தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் மனுதாரர், சாட்சிகள் அனைவரும் மேற்கு வங்காளத்தில் உள்ள சில்குரியைச் சேர்ந்தவர்கள், எனவே பாருக்காபாத்தில் உள்ள எம்ஏசிடியில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டால் மொழி ஒரு தடையாக இருக்கும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், "இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறைந்தபட்சம் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. இருப்பினும், இந்தி தேசிய மொழியாக இருப்பதால், சாட்சிகளிடம் எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தது.
மேலும், சிலிகுரியில் விபத்து நடந்ததால், உரிமைகோரல் மனுவை டார்ஜிலிங் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயம் முடிவெடுப்பது பொருத்தமானது என்று மனுதாரர் எழுப்பிய காரணத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.