இந்தியாவில் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 1395 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11, 706 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. குஜராத்தில் பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 548 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் பாதிப்பு 3 ஆயிரத்தை அதிகரித்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 30 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மாலை நேர நிலவரப்படி, 1379 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது. அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக 1204 பேர் குணமடைந்திருப்பதாகவும் அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,706ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 27.52%ஆக அதிகரித்திருப்பதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.