உத்தரப் பிரதேச அரசு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது, எங்கு பார்த்தாலும் குண்டர் ராஜ்ஜியம் தலைவிரித்தாடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 4-வது கட்டத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதேபூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

அமைச்சர் மீது வழக்கு

உத்தரப்பிரதேச அரசு சட்டம், ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டது. மாநிலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் தலைவிரித்தாடுகிறது. மாநில அமைச்சர் காயத்ரி பிரசாத் பிராஜாபதி ஒரு பெண்ணையும், ஒரு சிறுமியையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றால் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது?

அவமானம்

இந்த மிகப்பெரிய அவமானத்தால் முதல்வர் அகிலேஷ் யாதவின் முகத்தில் இருந்த ஒளி மறைந்துவிட்டது. அவரின் குரல் சத்தம் குன்றிவிட்டது. ஊடகங்களைச் சந்தித்து பேச அவர் தயங்கி வருகிறார். 

திறனில்லாத போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் திறனில்லாத போலீஸ் அமைப்பு ஏன் இருக்கிறது?, ஏன் புகார்கள் பதிவு செய்யப்படவில்லை?, என்ன விதமான பணி கலாச்சாரம்?, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி கவலைப்பட்டார்களா? உங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் அரசை தேர்வு செய்யுங்கள் என்று மக்களிடம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் மீது தாக்கு

சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ராம் மனோகர் லோகியாவை புன்படுத்திவிட்டது. பிறவியிலேயே கோடீஸ்வரராக இருக்கும் அந்த நபர்(ராகுல்காந்தி) இங்குள்ள சூழலை தங்களுக்கு சாதகமானது இல்லை என உணர்ந்திருக்கிறார். அதனால்தான், காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் எனது பெற்றோர்கள் மாதிரி. நான் இந்த மண்ணின் மைந்தனாக இல்லாவிட்டாலும்கூட, உத்தரப்பிரதேசத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்படுவேன். கிருஷ்ணர் உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் பிறந்தபோதிலும், குஜராத்தின் துவரகாவைத் தான் கர்ம பூமியாக மாற்றினார். அதுபோல், நான் குஜராத்தில் பிறந்தாலும், உத்தரப்பிரதேசத்துக்காக உழைப்பேன். நாங்கள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிக்கு முன்னுரிமையும், முக்கியத்துவம் அளிப்போம்.

 காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு ஆண்டுக்கு 9 சமையல் எரிவாயு சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த உறுதி அளித்தது. என் வேண்டுகோளை ஏற்று 1.50 கோடி மக்கள் மானியத்தை கைவிட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், 1.45 கோடி மக்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம். நீங்கள் எல்.இ.டி. விளக்கு வாங்க இதற்கு முன் ரூ.400 வரை செலவுசெய்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், அதை ரூ.100க்குள் விற்பனை செய்தோம். மக்கள் சாதி, மதரீதியாக வாக்களித்தாலும்,பாரதிய ஜனதா அரசு வளர்ச்சியை நோக்கியை செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.