Modi should strive for peace - UP Pakistani teenage complimentary letter about the election victory

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள பாகிஸ்தானின் 11 வயது சிறுமி, ‘அமைதிக்காக பாடுபடுங்கள் என்றும், எதிர்காலத்தில் அதிகமான வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

5-ம் வகுப் சிறுமி

பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்தவர் அகமது நாவித். இவர் லாகூரில் உள்ள தேசிய கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவருக்கு மோரிக் நாவித்(வயது14) என்ற மகனும், அகீதத் நாவித்(வயது11) என்ற மகளும் உள்ளனர். லாகூரில் உள்ள கத்தீட்ரல் பள்ளியில் மோரிக் நாவித்8-ம் வகுப்பும், அகீதத் நாவித் 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கைப்பட கடிதம்

இதில் அகீதத் நாவித், உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடிக்கு தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அந்த சிறுமி எழுதியுள்ளதாவது-

அமைதி, நட்பு

 மக்களின் மனங்களை வெல்வது தான் சிறப்பான செயல் என்னிடம் என் தந்தை ஒரு முறை கூறியிருக்கிறார். சமீபத்தில் உத்தரப்பிரதேசத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி மிகச்சிறப்பானது. இந்திய மக்களின் மனங்களை வென்றதால், தேர்தலிலும் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நீங்கள் இன்னும் அதிகமான இந்தியர்கள், பாகிஸ்தானிய மக்களின் இதயங்களை வெல்ல வேண்டுமென்றால், இரு நாடுகளுக்கு இடையே அமைதியையும், நட்புறவையும் வளர்க்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே நல்லவிதமான உறவு நிலவ அமைதி என்கிற பாலம் உருவாக்கப்பட வேண்டும்.

குண்டுகளுக்கு பதிலாக புத்தகங்கள்

இந்தியா துப்பாக்கி குண்டுகளை வாங்குவதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை வாங்க வேண்டும். இரு நாடுகளும் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். துப்பாக்கிகளை வாங்குவதை இருநாடுகளும் தவிர்த்து, இலவசமாக மருந்து, மாத்திரைகளை தங்கள் நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட, ஏழைமக்களுக்கு வழங்க வேண்டும். அமைதியையும், நட்பையும் கடைபிடித்தால் இருநாடுகளுக்கும் பயன் அளிக்கும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

சுஷ்மாவுக்கு வாழ்த்து

இதேபோல, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிறுமி அகீதத் நாவித் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர் நலன்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாநிலத்தில், சீக்கியர்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள், அவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மோரிக், அகீதத்தும் கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.