நாட்டில் பணமில்லா சமுதாயம் என்பது உடனடியாக சாத்தியமில்லை, அதேசமயம், முதலில் பணப் பயண்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அதன்பின், பணமில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் நேற்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக பேசத் தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார்.

கற்றுக்கொடுங்கள்
பணமில்லா சமுதாயத்துக்கு இன்றை இளைஞர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்களே, உங்களின் தந்தை, தாய் மற்றும் மூத்த சகோதரர் ஆன்-லைன்வசதி குறித்தும், மின்னனு பரிமாற்றம் குறித்து தெரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால், ஆன்-லைனில் ரெயில் டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது, பொருட்கள் எப்படி வாங்குவது என்பது குறித்து உங்களுக்கு தெரியும். ஆதலால், இந்த வசதி குறித்து உங்கள் குடும்பத்தாருக்கு கற்றுக்கொடுங்கள், சிறுவணிகர்களுக்கும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் நலன்கள் குறித்து தெரிவியுங்கள்.
5 பேருக்கு
நாள் ஒன்றுக்கு 5 பேருக்கு டிஜிட்டல் பேமெண்ட் குறித்து கற்றுக்கொடுங்கள். உங்கள் வீட்டுக்கு வரும் காய்கறி விற்பவர், தள்ளுவண்டியில் பொருட்கள் விற்பவர் ஆகியோரிடம் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த நன்மைகளை எடுத்துக் கூறுங்கள்
பாதுகாப்பானது
டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணங்கள் செலுத்துவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பணமில்லா பொருளாதாரம் தான் மிகவும் பாதுகாப்பானது. டிஜிட்டல்பொருளாாதாரத்தை நோக்கி நாம் முன்னெடுத்துச் செல்லும்போது, இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. முதலில் பணத்தை பயன்படுத்துவதைக் குறைத்து, அடுத்து மெல்ல பணமில்லா பொருளாதாரத்துக்கு மாறுவோம்.

பொறுமை
கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கும் முயற்சியாக நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைவருக்கும் சிரமத்தை கொடுத்து இருக்கும். நான் கூறியதுபோல் 50 நாட்கள் மக்கள் பொறுமை காத்தால், அதன்பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம், பொருளாதாரமும் சிறப்பான பாதைக்கு திரும்பும்.
நன்றி
இதற்கான ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. வங்கிகள், தபால் நிலையங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது. அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறேன்.
கவனிக்கிறது
ஒட்டுமொத்த உலகமும் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறது. ‘ரூபாய் நோட்டு மதிப்பிழத்தல்’ நடவடிக்கை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கண்காணித்து வருகிறார்கள். 125 கோடி மக்கள் கொண்ட பெரிய ஜனநாயக நாட்டைக் கொண்டுள்ள நாம், எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி இதுவாகும்.

70 ஆண்டு நோய்
மக்களாகிய நீங்கள் அதிகமான சிரமத்தை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். என்ன செய்வது, 70 ஆண்டுகாலம் நாட்டை பீடித்து வந்த நோயை குணப்படுத்துவது என்பது சாதரண காரியம் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
எச்சரிக்கை
இன்னும் சிலர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து சில வேலைகளை செய்து வருகிறார்கள். இதற்காக ஏழைமக்களை அவர்கள் துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பொருந்தாத செயல்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன். இதற்காக ஏழைமக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
