மத்திய அரசின் விளம்பரங்களில்உள்ள பிரதமர் படத்தை அகற்றும்படி ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும்தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு கடந்த வாரம்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த 4 ம் தேதியே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.  

இருப்பினும் ஐந்து மாநிலங்களிலும் மத்திய அரசின் விளம்பரங்களில் குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளம்பரங்களில் பிரதமர்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களில்உள்ள பிரதமரின் படத்தை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்தது.

இந்த நிலையில் ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அரசுவிளம்பரங்கள் மற்றும் பேனர்களில் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும்   அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கக்கூடாது. அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் அல்லது படம்தெரியாத அளவுக்கு மறைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  மேலும் தனியார் இடங்களில் எந்த ஒரு அரசியல்தலைவர் விளம்பரம் வைக்கப்பட்டாலும்அதற்கு அந்த தனியாரிடம் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் அந்த பேனர் வைத்த செலவு வேட்பாளரின் செலவு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்  தேர்தல்  ஆணையம் கூறிஉள்ளது.