பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி பிரதமர் மோடி நேற்று வானொலியில் ‘மன் கீ பாத்’ உரை நேற்று ஒலிபரப்பானது. அதில், பெரும்பாலும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்மு 37 நிமிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேரியக்கத்தை (ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு) தொடங்குவது குறித்து கடந்த 8ம் தேதி நாட்டு மக்களுக்கு நான் கூறினேன். ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பின்தங்கியவர்களின் துன்பங்களை போக்கவே இந்த முடிவை நான் மேற்கொண்டேன்.

இந்த முடிவு சாதாரண விஷயம் அல்ல. அதிக கஷ்டங்கள் கொண்டது என நான் அப்போதே கூறினேன். இந்த பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர 50 நாட்கள் ஆகும் என்றும் கூறினேன். இந்த வேளையில் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை எல்லாம் என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும், உங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை பார்க்கும் போது, நாட்டு நலன் கருதி இந்த நடவடிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள் என்பதை நான்அறிந்து கொண்டேன். தேசத்தை 70 ஆண்டுகளாக பாதித்து இருக்கும் இந்த நோய்க்கு எதிரான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்காது.

அரசு ஊழியர்கள், அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.