ரூபாய் நோட்டு தடை தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்தும் என்று பிரதமர் மோடி கூறினாரே, ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் எத்தனை ராணுவ வீரர்கள் எல்லையில் இறந்தனர்என்ற பட்டியலை வெளியிடத் தயாரா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சிவசேனா கட்சி தனது கட்சி நாளேடான ‘சாம்னா’வில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது-
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, அவர் பேசும்போது, இந்த நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை கட்டுப்படுத்தும், தீவிரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், ஜம்மு மாவட்டம் அக்னூர் பகுதியில் உள்ள ரிசர்வ் பொறியியல் படை அலுவலகத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகவே, ரூபாய் நோட்டு தடை தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் இருக்கிறது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா?.
ஒருநேரத்தில் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடங்களை குறிவைத்தனர். ஆனால், இப்போது, ராணுவ மையங்களையும், வீரர்களையும் குறிவைத்து கொல்கின்றனர். இதைத்தான் மாற்றம் என்று எடுத்துக்கொள்ளவா?.
ரூபாய் நோட்டு தடை அறிவிக்கு கொண்டு வர முக்கியக்காரணம் தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்தத்தான் என்று கூறுகிறார்கள். ஆனால்,தீவிரவாதிகளின் செயல்கள் தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் கூட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு 32 வீரர்களும், 2015ம் ஆண்டு 33 வீரர்களும் தீவிரவாத தாக்குதலுக்கு கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 60 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த செயல்களுக்கு பாகிஸ்தானுக்கு பங்கு இல்லை என்று எப்படி நாம் நம்ப முடியும்?.
மத்தியஅமைச்சர் மனோகர் பாரிக்கர், சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் ஆர்.எஸ்.எஸ். பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்துவிட்டது என்று உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசி இருந்தார். தாக்குதல் தொடர்பான விசயத்தில் யாரும் ராணுவத்தினரை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது. சர்ஜிகல் ஸ்டிரைக் ராணுவம் நடத்தியது, ஆனால், அனைத்து பெருமைகளையும் பாரதிய ஜனதா கட்சி எடுத்துக்கொண்டு விட்டது.

ரூபாய் நோட்டு தடை என்பது இப்போது தேசிய முக்கியத்துவம் பெற்றதைக் காட்டிலும், அரசியல் விஷயமாக மாறிவருகிறது. ரூபாய் நோட்டு தடைக்கு பின் எல்லையில் எத்தனை வீரர்கள் இறந்தனர் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும், ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசியல் செய்வதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாரதிஜனதா கட்சிக்கு துணிச்சல் இருந்தால் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
