Asianet News Tamil

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதி மொட்டை, நைட்டியுடன் திரியும் ஓட்டல் அதிபர்..!!

modi demonetisation-trivandrum-man
Author
First Published Nov 28, 2016, 4:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை பாதி மொட்டைத் தலையுடன் இருக்கப் போவதாக கேரளாவில் சிறிய ஓட்டல் நடத்தும் முதியவர் ஒருவர் தெரிவித்து, மொட்டை அடித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதையும் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு இதுபோன்ற காட்சியை சாட்சியாகும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சாமானிய மக்கள்தான்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கல் முக்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் யாகிகாக்கா. இவர்தான் மோடியை அகற்றும் வரை தலையில் ஒரு பகுதியை முடிவளர்க்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “ என் பெயர் யாகியா. எல்லோரும் என்னை யாகியா என்று கூப்பிடுவார்கள். 70வயதான நான், முக்குன்னத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறேன்.  எனக்கு மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.

நான் தென்னை மரம் ஏறி, வயலில் வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தால் கூட எனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தேன். என் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, அரபுநாட்டுக்கு சென்று வேலைபார்த்தேன். அங்கு சம்பாதித்த பணத்துடன் ஊருக்கு திரும்பி, கையில் இருந்த பணத்துடன், கடக்கல் கூட்டுறவு வங்கியில் சிறிது கடன் பெற்று எனது மகள்களுக்கு திருமணத்தை முடித்து வைத்தேன்.

அதன்பின் இந்த சிறிய ஓட்டலை நடத்தி வருகிறேன். மாலை 5 மணியில் இருந்து இரவு வரை இந்த கடையை நடத்தி வியாபாரம் செய்து வருகிறேன். பிரதமர்மோடி ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியிடும் போது, என்னிடம் ரூ.23 ஆயிரம் பழைய நோட்டுகள் இருந்தன. இவற்றை வங்கியில் கொடுத்து மாற்ற 2 நாட்கள் அலைந்தேன். கால் வலிக்க காத்துக்கிடந்தேன். 2-வதுநாள் என் உடம்பில் சர்க்கரை அளவு குறைந்து, நான் மயக்கம் போட்டு விழுந்தேன். அங்கு இருந்தவர்கல் என்னைக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

கையில் இருந்த பணமும், செல்லாமல் போனது, கூட்டுறவு வங்கியில் இருந்த பணத்தையும் எடுக்கமுடியவில்லை, அங்கு டெபாசிட்டும் செய்யமுடியவில்லை. எனக்கு வங்கிக்கணக்கும் கிடையாது. எத்தனை நாட்கள் இந்த பணத்தை மாற்ற வங்கியின் வாசலில் காத்துக்கிடப்பது. நான் ஆண்டுக்கணக்கில் சேர்த்து வைத்த பணத்தை டெபாசிட் செய்யக்கூட முடியவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினேன், வீட்டில் இருந்த ரூ. 23 ஆயிரம் பணத்தையும் அடுப்பில் போட்டு எரித்துவிட்டேன். அருகில் இருந்த சலூன் கடைக்கு சென்று எனது தலையை பாதி மொட்டை அடித்துக்கொண்டேன்.

மோடி பிரதமர் பதவியில் இருந்த இறங்கும்போதுதான், நான் தலையில் பாதி முடிவளர்ப்பேன் என்று சபதம் செய்து கொண்டு கடந்த சில நாட்களாக வாழ்ந்து வருகிறேன். என் கடினஉழைப்பால் சேமித்த பணம் அனைத்தும் சாம்பலாகப் போய்விட்டது. மோடியை ஆட்சியை விட்டு இறக்கினால்தான் நாடு பாதுகாக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அஸ்ரப் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ மோடியின் செல்லாப் பணம் அறிவிப்பு மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது. யாகியாதான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மாற்றமுடியாத விரக்தியால்தான் தீவைத்து கொளுத்திவிட்டு, தலையை பாதி மொட்டை அடித்துள்ளார்.

இவர் நடத்தும் சிறிய கடையில் பாதி மொட்டையுடன், நைட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வருகிறார். ஏன் நைட்டி அணிகிறீர்கள் என்றால், அதுதான் வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios