500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது, இதன் பின்னர் தங்களிடன் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதுகிறது. வயதானவர்கள், பெண்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டில் பணப்புழக்கம் சீரடைய இன்னும் 50 நாட்கள் ஆகும் என பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், பணப் புழக்கம் முடங்கியதன் காரணமாக, 5 நாட்களில் இதுவரையில் 16 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரையில் நாட்டில் நடந்த இறப்பு சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரம்:

1. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோளாருடன் பிறந்த குழந்தைக்கு, பெற்றோரிடம் புதிய நோட்டுகள் இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாக அக்குழந்தை இறந்தது. 

2. உத்தரபிரதேசத்தில் நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தொழிலதிபர், இனிமேல் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை பார்த்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவர் வருவதற்கு முன்னர் இறந்தார்.

3. விசாகப்பட்டிணத்தில் 18 மாத குழந்தைக்கு மருந்து வாங்க புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாத காரணத்தினால் அக்குழந்தை இறந்துள்ளது. அக்குழந்தையின் பெற்றோரிடம் பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்துள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

4. உத்தரபிரதேசத்தில் ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது, எனினும் மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற மறுத்து சிகிச்சை அளிக்காததால் அக்குழந்தையும் இறந்தது.

5. ராஜஸ்தானில் வீட்டில் பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தார் மறுப்பு - குழந்தை மரணம்.

6. உத்தரபிரதேசத்தில் தன்னிடம் இருந்த இரண்டு 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யச் சென்றபோது, அவரிடம் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என தெரிய வந்த போது அப்பெண் அதிர்ச்சி காரணமாக அவர் இறந்து போனார்.

7. தெலங்கானாவில் பெண் ஒருவர் நிலம் விற்று வைத்திருந்த 54 லட்சம் ரூபாய் பணத்தை கணவனின் மருத்துவ செலவிற்காகவும், மகளின் திருமண செலவிற்காகவும் சேமிப்பாக வைத்திருந்த போது, ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக ஆக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

8. மேற்குவங்காளத்தில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றச் சென்ற மனைவி, வங்கியிலிருந்த கூட்ட நெரிசல் காரணமாக மாற்றாமல் வந்ததால், கணவன், தனது மனைவியையே கொலை செய்துள்ளார்.

9. பீகாரில் மகளின் வரதட்சணைக்காக தான் வைத்திருந்த 35,000 பழைய ரூபாய் நோட்டுகளை மணமகன் வீட்டார் வாங்குவார்களோ, மாட்டார்களோ என மனவேதனையில் தவித்தபோது மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.

10. கேரளாவில் தன்னிடம் இருந்து கடனாக வாங்கியிருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தச் சென்றபோது மறுத்ததால், வங்கியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.

11. மும்பையில் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற முதியவர் நெஞ்சுவலி காரணமாக பலியானாா்.

12. குஜராத்தில் உள்ள ஒரு வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற விவசாயி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

13. கேரள மாநிலம் ஆலப்புழாவில், ஒரு மணி நேரமாக வங்கியில் புதிய பணம் பெற காத்திருந்த 75 வயது முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

14. கர்நாடகா மாநிலம் உடுப்பியில், வங்கி திறப்பிற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த 96 வயது முதியவர் அங்கேயே விழுந்து இறந்தார்.

15. மத்திய பிரதேசத்தில் வங்கியில் புதிய பணம் பெற வரிசையில் காத்திருந்த 69 வயதானவர் இறந்தார்.

16. போபாலில் உள்ள ஸ்டேட் பாங்க் காசாளர் புதிய பணத்தினை மக்களுக்கு மாற்றிக்கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக பலியானாா்.