அமைச்சரவைக் கூட்டங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின்பேரில் அமைச்சர்களின் தனி செயலாளர்களுக்கு, மத்திய அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டங்களின்போது எடுக்கப்படும் முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள் வெளியே கசியாமல் இருக்கும் வகையில், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பெயரில் மத்திய செயலகம் அனைத்து அமைச்சர்களின் தனி செயலாளர்களுக்கு சுற்றறிக்கையை வழங்கி உள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இனி ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்போன்கள் அனுமதி கிடையாது என்றும் இது குறித்து தங்களுடைய அமைச்சருக்கு எடுத்துரையுங்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாராளுமன்றத்தின் தெற்கு பிளாக்கில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் ஸ்மார்ட் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு செல்போன்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது இது முதல் முறை அல்ல. 2010 ஆம் வருடம் மே மாதம் பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வருவதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தடை விதித்தார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்சில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது செல்போன் பயன்பட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
