கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் அளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பிக்களும் ஒரு மாதச் சம்பளத்தை கொடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பருவமழை தீவிரம் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மாநிலமெங்கும் தீவு போன்று காட்சியளிக்கிறது. பெருமழை மற்றும் வெள்ளத்தில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். பலர்  உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இதனையடுத்து, கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் மோடி நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், நிறுவனர்கள், அரசியல் தலைவர்கள், மாநில அரசுகள் என பலர் கேரளாவின் வெள்ள பாதிப்புகளுக்காக நிவாரண நிதி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் அளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பிக்களும்  தத்தம் மாதச் சம்பளத்தை கொடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.