உத்திரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா.  இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா 23 வயதான இவர்  அண்மையில் அஜித்தேஷ் குமார் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அஜிதேஷ்குமார் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்திற்கு ராஜேஷ் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய தந்தையாலும், சகோதரராலும் எங்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சாக்ஷி மிஸ்ரா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது...  ''மரியாதைக்குரிய எம்.எல்.ஏ பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். நான் திருமணம் செய்து கொண்டேன். ஃபேஷனுக்கான குங்குமம் வைக்கவில்லை” என கூறியுள்ளார்.

 

மேலும் ''தனது தந்தை தங்களை தாக்க குண்டர்களை அனுப்பியதாகவும், இனி எங்களால் ஓட முடியவில்லை, மிகவும் சோர்வாக இருப்பதாகவும், எனவே எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் எங்களது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு எனது தந்தையும் சகோதரர்களும் தான் காரணம் என சாஷி மிஸ்ரா தனது வீடியோவில் குறிப்பிட்டு போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வியாழக்கிழமை சாக்‌ஷி மிஸ்ரா, அஜித்தேஷ் குமாரை திருமணம் செய்துகொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.