வெள்ளநீருடன் போராட்டம்: இடைக்கால நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!
கனமழை பாதிப்புகளை சரி செய்திட இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை உட்கட்டமைப்பை பெரிதும் சேதப்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கனமழை பாதிப்புகளை சரி செய்திட இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பேரழிவு குறித்து எனது சமீபத்திய கடிதத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை விரிவாக விவரித்துள்ளேன். எங்கள் உள்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வெள்ளநீருடன் போராடி வருகின்றனர்.
உடனடி மறுசீரமைப்பு முயற்சிகளுக்காக ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டுள்ளேன். அத்துடன், முழுமையான மீட்சியை உறுதிசெய்யும் பொருட்டு, கூடுதல் நிவாரண நிதிக்கான தேவையை மதிப்பிடுவதற்கான விரிவான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
முன்னெப்போதும் இல்லாத சவால்களை நமது மக்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆனால், ஒன்றுபட்டால், இந்தப் பேரிடரில் இருந்து நாம் வலுவாக வெளியே வந்துவிடுவோம் என உறுதியாக நான் நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.