புதுச்சேரி அமைச்சர் ஒருவர், வயலை சீர் செய்து, நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். அமைச்சராக இருந்தாலும் எப்போதும் எளிமையாகவே காட்சியளிப்பார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், அலுவலக பணிகளை முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் போதெல்லாம், காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபடுவார்.

இதேபோல், நேற்று காரைக்காலில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்துக்கு சென்ற அவர், வேட்டி - சட்டையை கழற்றி விட்டு, சாதாரண விவசாயி போல் கைலி அணிந்தார். இதன் பின்னர், வயலில் இறங்கி மண் வெட்டியால் நிலத்தை சீர் செய்தார்.

இதன் பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் நாற்று கட்டுக்ளைத் தூக்கிச் சென்று, நாற்றுகளை நடும் பணியில் ஈடுபட்டார்.அமைச்சரின் இந்த செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 

தான் விவசாயம் செய்வது பற்றி அமைச்சர் கமலக்கண்ணன் கூறும்போது, நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில், உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்ற பாரதியார் பாடல்களுக்கேற்ப நான் விவசாயப்பணியில் ஈடுபடுகிறேன் என்று கூறினார்.