பொதுமக்கள் சுலபமாக பணம் எடுக்க விரைவில் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணப்புழக்கமும் அதிவேகத்தில் குறைந்து உள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் தவமாய் தவமிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், ஏடிஎம் மெஷின்கள் செயல்படாததாலும், திறந்து இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் விரைவில் பணம் தீர்ந்து விடுவதாலும் போதிய பணம் எடுக்க முடியாமல், அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நகர் புற பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் அனைத்தும் புதிய ரூ.2,000 நோட்டுகள் வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நிதி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஏ.டி.எம். தொழில்நுட்ப மாற்றியமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதுடன், மக்களுக்கு வேகமாக பணம் கிடைப்பதற்கான வழிகளை இவர்கள் உறுதி செய்வர். இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இன்று முதல் புதிய ரூ.2,000 நோட்டுகளை ஏ.டி.எம்.மில் இருந்து பெறலாம். இதைப்போல புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் வந்துள்ளன.
மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் சுலபமாக பணம் பெறும் வகையில் ஏராளமான மைக்ரோ – ஏ.டி.எம்.கள் உருவாக்கப்படும். ஒருவர் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.
