சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக பொறுப்பு வகிக்கும் வாசுதேவன் நம்பூதிரி இன்றுடன் விடைபெறுகிறார். புதிய மேல்சாந்தியாக சுதீர் நம்பூதிரி பதவியேற்கிறார்.

இந்நிலையில், சபரிமலை கோவில் தரிசனத்துக்கு இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பற்றி வாசுதேவன் நம்பூதிரி, ’’சபரிமலை கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழையக்கூடாது என்பது காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இந்த ஐதீகத்தை ஒருபோதும் மாற்றக்கூடாது. மாற்ற வேண்டும் என்றும் யாரும் நினைக்க கூடாது.

கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டபோது பாரம்பரியத்தை குலைக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. நடைப்பந்தல் வரை பெண்கள் வந்து சென்றனர். எனினும் கோவில் ஐதீகங்கள் மீறப்படாது என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன். அது இனிமேலும் தொடர வேண்டும். ஐதீகங்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதற்கு கோவில் மீது பற்றுள்ள அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்’’என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய மேல்சாந்தி சுதீர்நம்பூதிரி கூறுகையில் ’’இந்தாண்டு பிரச்சினை எதுவும் இருக்காது என நினைக்கிறேன். ஐயப்பன் அருளால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அமைதியாக நடைபெறும் என்று நம்புகிறேன். இதற்கு ஐயப்பன் நிச்சயம் அருள்புரிவார்’’எனத் தெரிவித்தார்.