சோதனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஆகஸ்ட் 15-க்கு முன்பாக கோவேக்ஸின் மருந்தை கேட்பது அபத்தமானது என்று மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகே அரண்டு கிடக்கும் நிலையில், பல நாடுகளும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் குதித்துள்ளன. இந்தியாவும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் மருந்து நிறுவனம் கோவேக்ஸின் என்ற தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு கழகம், மனிதர்களின் மீதான பரிசோதனையான முதல் கட்டம், 2-ம் கட்ட  பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி ஜூலை 13-ம் தேதி முதல் கட்ட சோதனையை 1,125 பேரிடம் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மேலும் இரு கட்டங்கள் பரிசோதனை செய்து முடிக்க வேண்டும். இந்தம் மூன்று கட்டங்களிலும் வெற்றி பெற்றால், இந்த மருந்து சந்தைக்கு வந்துவிடும். மேலும் உலகில் கொரோன வைரஸுக்கு அதிகாரபூர்வமாக மருந்து கண்டுபிடித்த நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பூசி  தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்து மருந்து நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மனிதர்களுக்கு இன்னும் சோதனையே தொடங்கப்படாத நிலையில் ஆய்வுக்குப் போதிய காலஅவகாசம் வழங்காமல் தேதியை அறிவித்துள்ளது மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 
இந்நிலையில் நோயின் தீவிரமானப் பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நாடு தழுவிய அவசர நிலையால், தடுப்பூசியை விரைவாக பரிசோதிக்க , அதன் உரிமம் பெற்ற நிறுவனத்துககு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெருக்குதல் அளித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் வைராலஜிஸ்ட் மற்றும் வெல்கம் டிரஸ்ட்-டிபிடி கூட்டணியின் தலைமை நிர்வாகி ஷாகித் ஜமீல், மருந்து பயன்பாட்டுக்கு காலக்கெடு விதித்துள்ளது அபத்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்த அறிவிப்பை உலகளாவிய விஞ்ஞான சமூகம் நம்மைப் பார்த்து சிரிக்கும். இதை நினைத்து நான் அஞ்சுகிறேன். இந்தியா அறிவியலில் தீவிரமான ஒரு நாடு. நாம் இப்படி நடந்துகொண்டால் நம்மை  யார் நம்புவார்கள்? அதுதொடர்பாக கடிதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியைப் பார்த்து நான் திகைத்துபோனேன். இது ஒரு கடிதமே அல்ல, அது அச்சுறுத்தல் போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இவரைப் போலவே காலக்கெடு வைத்து மருந்து கேட்பதற்கு மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.